Sunday 11 September, 2011

முன்பு கேட்டதை இப்போது வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்:- கலைஞர் கருணாநிதி

தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்படும் கேள்விகளின் மூலம் காவல்துறையினர் பயப்பட வேண்டும். அந்தப் பயமேகூட நம்மைப் பாதுகாக்கக்கூடிய எச்சரிக்கை கருவியாகக்கூடும் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அரசின் அத்துமீறலைத் தடுப்பது தொடர்பாக திமுக வழக்குரைஞர்கள் ஆலோசனைகூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குத் தலைமை தாங்கி கருணாநிதி பேசியது: திமுகவில் வழக்குரைஞர்கள் அணி இருக்கிறதா என்று முன்பு கேட்டதை இப்போது வாபஸ் பெற்றுக்கொள்கிறேன். நெருக்கடி நிலை காலத்தில்கூட யாரும் திமுகவை அடியோடு வீழ்த்திவிட முடியவில்லை.

தினமும் காலை ஏடுகளில் கைது செய்திகளைப் பார்த்து பதற நேரிடுகிறது. இவற்றிற்கெல்லாம் வழி காண வேண்டும். சட்டப் பிரச்னைகளைச் சட்டத்தால் சந்திப்போம் என்று சொல்பவர்கள் நாம். இன்றைக்கும் ஜனநாயக வழியில் சட்ட ரீதியாக நம்முடைய வழக்குகளைச் சந்திப்போம்.

காவல்துறையாக இருந்தாலும், எந்தத் துறையாக இருந்தாலும் அவர்கள் அஞ்சி நடுங்க வேண்டும். நமக்கு எதிர்காலத்தில் என்ன கதி ஏற்படுமோ என்று இப்போதே பயப்பட வேண்டும். அதற்கேற்ப தகவலறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி நம்மை நோக்கி வருகின்ற துறையினரைக் கேள்விகள் கேட்க வேண்டும். "தகலறிதல்' என்றாலே அவர்கள் பயப்பட வேண்டும். அந்தப் பயமேகூட நம்மைப் பாதுகாக்கின்ற ஓர் எச்சரிக்கைக் கருவியாக ஆகக் கூடும். எனவே, தகவலறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்துங்கள்.

ஏழை கட்சி: அந்தப் பணிக்குப் பணம் செலவழிக்க வேண்டுமே? என்று வழக்குரைஞர்கள் கேட்கலாம். பெரிய பொதுத் தேர்தலைச் சந்தித்துவிட்டு ஆட்சி பொறுப்புக்கு வராமல் இன்று ஏழையாக இருக்கின்ற கட்சி திமுக என்பதை மறந்துவிடக் கூடாது. இந்தப் பேரியக்கத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு வழுக்குரைஞர்களுக்கு இருப்பதை மனதில் வைத்துக்கொண்டு தலைமைக் கழகத்தை எதிர்பார்க்காதீர்கள்.

அரசுக்கு அச்சம்: வழக்குரைஞர்கள் பெருந்திரளாக கூடியிருப்பதே இந்த அரசை மிரட்டுகின்ற ஒரு செய்தியாகவே நான் கருதுகிறேன் என்றார் கருணாநிதி.

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், பரிதி இளம்வழுதி, அமைப்புச் செயலாளர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், பெ.வீ.கல்யாணசுந்தரம், சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டதிட்ட திருத்தக்குழு செயலாளர் ஆர்.சண்முகசுந்தரம், சட்ட ஆலோசகர் என்.ஜோதி, தலைமைக்கழக வழக்குரைஞர்கள் கே.எஸ்.ரவிச்சந்திரன், இ.பரந்தாமன் உள்பட

வழக்குரைஞர்கள் பலர் கூட்டத்தில்

பங்கேற்றனர்.

thanks http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamilnadu&artid=474788&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=

No comments:

Post a Comment