மக்கள் பிரதிநிதிகள் அளிக்கும் திட்டங்களை ஆட்சியரும் அதிகாரிகளும் அனுமதிப்பதைத் தவிர, வேறு வழியில்லை என்ற நிலையை மாற்றவும், எந்தெந்தத் திட்டங்களை மட்டும் இத்திட்டத்தில் நிறைவேற்ற முடியும் என்கிற கட்டுப்பாடும் மிகவும் அவசியமாகிறது.
தனது பெயரை விளம்பரப்படுத்தும்விதமாக சாலையில் நிழற்குடை கட்டப்பட்டு ஓராண்டுகூட நிறைவடையாத நிலையில், நூறு மீட்டர் தள்ளி புதிய பேருந்து நிழற்குடை அமைப்பதைக் காணும்போது, நம் கண்ணெதிரில் மக்கள் பணம் வீணடிக்கப்படுவதைக் கண்டு வேதனைப்படுவதைத் தவிர, இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தடுத்து நிறுத்த முடியவில்லை. போக்குவரத்து நெரிசல் காரணமாக, இப்படி ஓராண்டுக்குள் மாற்றியமைக்க வேண்டிய தேவை எழும் என்று தெரிந்தால், அதிகாரிகள் இத்தகைய நிழற்குடையை இடம்பெயர்க்க தக்க வடிவமைப்பில் அமைக்கத்தான் அனுமதித்திருக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் இதைப்பற்றி யோசிக்கவும்கூட, உண்மையை அறிந்துகொள்ளவும்கூட நேரமில்லாமல் மக்களின் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.
தன்னார்வ அமைப்புகளுக்கும் அறக்கட்டளைகளுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு வழங்கும் திட்டச்செலவு ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என்று புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. ஆக,
இதுநாள் வரை இவர்கள் தன்னார்வ அமைப்புகளுக்கும் அறக்கட்டளைகளுக்கும் திட்டநிதிஒதுக்கீடு செய்து வருகிறார்கள் என்கிற உண்மை வெளிப்பட்டிருக்கிறது. அரசுப் பணத்தை எதற்காக இவர்கள் தன்னார்வ அமைப்புகளுக்குச் செலவிட வேண்டும்?ரூ.50 லட்சம் என வரையறை செய்வதைவிட இதை முற்றிலுமாக நீக்குவது என்பதே நியாயம்.
ஒரு எம்எல்ஏ, எம்பி என்பவர் தனது தொகுதிக்காக என்ன நன்மை செய்தார் என்பதை அளவிடுவதற்கான ஒரு நடைமுறை நம்மிடம் இல்லை. இவர்கள் கட்டித் தரும் கட்டடங்கள் அவர்கள் காலத்திலேயே இடிந்து விழுமெனில் அதன் தரம் குறைந்த கட்டுமானத்துக்காக அவரையும் பொறுப்பேற்கச் செய்யும் விதிமுறைகள் இந்தத் திட்டத்தில் இல்லை. ஆகவே, முறைகேடுகளுக்கு அதிக இடம் அளிப்பதாகத் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் தொடர்கிறது.
இரண்டு லட்சத்துக்கும் குறைவான திட்ட மதிப்பீடு இருப்பின் முழுத் தொகையும் உடனடியாக வழங்கப்படும் என்கிற புதியநடைமுறை, அவசியமற்ற சிறுசிறு திட்டங்களை மேற்கொள்ள வழிவகுக்கும். தொகுதிக்கு வெளியே ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை ஏதாவது ஒரு திட்டத்துக்குச் செலவிடலாம் என்பதும் கண்ணுக்குத் தெரியாத இடத்தில், திட்டத்தைச் செய்ததாகச் சொல்லி பொய்யாகக் கணக்கெழுதவே உதவும்.
ஆண்டுதோறும் ரூ.4,000 கோடி வரை செலவிடப்படுவதால், இதில் பாதித் தொகையையாவது தேசிய அளவிலான ஒரு பொதுத்திட்டத்தை வரையறுத்து அதைச் செய்வதற்காக ஒதுக்கீடு செய்தால் மக்களுக்குப் பயன் தருவதாக அமையும்.
உதாரணமாக, 2011-12-ம் ஆண்டில், இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்காகக் கழிப்பறை வசதி, சுத்திகரிப்பு கருவி பொருத்திய தூய்மைக் குடிநீர் வழங்கல் ஆகிய திட்டத்துக்காக மட்டுமே 50 விழுக்காடு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று வரையறுக்கப்பட வேண்டும். ஆண்டுதோறும், இத்தகைய ஏதேனும் ஒரு பொதுத்திட்டத்துக்குப் பாதி நிதியை ஒதுக்கவும், இதற்காக இடங்களைத் தீர்மானிப்பதில் மட்டுமே எம்பிக்களுக்கு விருப்புரிமை வழங்கவும் செய்யலாம். அப்படிச் செய்யும்போது நாடு தழுவிய ஒரு திட்டம் எம்எல்ஏ அல்லது எம்பியின் நேரடிக் கண்காணிப்பில் முறையாக நிறைவேற்றப்படும்.
மீதமுள்ள 50 விழுக்காடு தொகையை, மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைகேட்பு நாளில் கிடைக்கும் மனுக்களில் சொல்லப்படும் மக்கள் தேவைகளில், அரசால் உடனடியாகச் செய்ய இயலாத நிலையில், எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்திக் கொள்ளப் பரிசீலிக்கலாம்.
இத்தகைய கட்டுப்பாடுகள், இத்திட்டம் ஒரு தனிப்பட்ட நபரின் விருப்பமாக இல்லாமல் மக்களின் தேவை கருதிய விருப்பமாக இருக்கும். மக்கள் பணம் மக்களுக்கு முறையாகச் செலவிடப்படும்.
மக்களின் வரிப்பணம் விரயமாக்கப்படுவது தடுக்கப்பட்டு ஆக்கபூர்வமான வளர்ச்சிப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இல்லையென்றால், இந்தத் தொகுதி மேம்பாட்டு நிதி என்பது குறிக்கோள் இல்லாமல் வாரி வழங்கப்படும் "எம்பிக்கள் வளர்ச்சிநிதி' என்பதாகத்தான் இருக்கும்.
நன்றி:-http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=435222&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=
No comments:
Post a Comment