அனைவருக்கும் கல்வி, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் ஆகிய திட்டங்களையும் தணிக்கை செய்ய விருப்பம் தெரிவித்து தலைமைக் கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதம் இன்னமும் தூசிபடிந்து கிடக்கிறது என்கிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இவ்வளவு காலமாக இந்த இரு முக்கிய திட்டங்களின் செலவினங்களும் தணிக்கையின்கீழ் வரவில்லை என்பதே புதிய தகவல். இந்தக் கோரிக்கையை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கிடப்பில் போட்டிருப்பது என்பது அதைவிட அதிர்ச்சி தரும் செய்தி.
அண்மையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அதிக லாபம் கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் செய்தது, தனியாருக்காக செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தை வெளிக்கொணர்ந்தது இவை எல்லாமும் சி.ஏ.ஜி. மூலம்தான் அம்பலத்துக்கு வந்தன. ஆண்டுக்கு ரூ.80,000 கோடி வரை செலவிடப்படும் அனைவருக்கும் கல்வி மற்றும் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் அவர்கள் தணிக்கை நடத்தினால், மிகப்பெரிய ஊழல்கள் அம்பலத்துக்கு வரக்கூடும் என்பதால்தான் மத்திய அரசு தலைமைக் கணக்கு தணிக்கையாளரின் கோரிக்கையைக் கிடப்பில் போட்டிருக்கிறது என்று நம்ப இடமிருக்கிறது. தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டம், படவேடு அருகே செண்பக அணை கட்டப்பட்டது.இதில் 7 நீர்போக்கிகள் இருப்பதாகக் கணக்கு எழுதப்பட்டு செலவும் எழுதப்பட்டது. ஆனால், கட்டப்பட்டவை வெறும் 4 நீர்போக்கிகள் மட்டுமே.இத் திட்டச் செலவைத் தணிக்கை செய்த மத்திய தணிக்கைத் துறையின் (அக்கவுண்டெண்ட் ஜெனரல் அலுவலகம்) நேர்மையான அதிகாரி, இத்திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது என்பதைத் தனது அறிக்கையில் பதிவுசெய்தது மட்டுமல்ல, அந்த அணையை நேரில் ஆய்வுசெய்து, புகைப்படம் எடுத்து, நான்கு நீர்ப்போக்கிகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன என்பதைச் சான்றாதாரமாக இணைத்தார். விளைவு? நான்கு பொறியாளர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், இவ்வாறு கணக்கு எழுதச்சொன்ன அரசியல்வாதி மீது எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழக பொதுப்பணித்துறையில் ஒரு உள்தணிக்கைப் பிரிவு உள்ளது. இந்தத் திட்ட நிதிக்குத் தரப்படும் ஒதுக்கீட்டை இவர்கள்தான் கண்காணிக்கிறார்கள். அவர்கள் மீதும் நடவடிக்கை இல்லை. பாவம், உடந்தையாக இருந்து மேலதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும்
கீழ்ப்படிந்துநடந்த நான்கு பொறியாளர்கள் மட்டுமே மாட்டிக்கொண்டார்கள். தமிழக உள்ளாட்சித் தணிக்கையில் ஏன் இது கவனம் பெறவில்லை என்றால் இதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அதாவது, மத்திய தணிக்கைத் துறை அலுவலத்தின் தணிக்கை அதிகாரி எந்தவொரு திட்டப் பணியையும் நேரில் சென்று ஆய்வு நடத்த அதிகாரம் பெற்றுள்ளார். ஆனால், தமிழ்நாட்டில் ஒவ்வொரு துறையின் கணக்கையும் தணிக்கை செய்யும் தமிழ்நாடு உள்ளாட்சித் தணிக்கைப் பிரிவு அதிகாரிகளுக்கு நேரில் போய் பார்க்கும் அதிகாரம் இல்லை. அவர்கள் தங்களுக்கு அளிக்கப்படும் ரசீதுகளை ஒப்பிட்டு, கணக்கைச் சரிபார்ப்பதோடு சரி என்பதுதான். நகராட்சிகளிலும் பஞ்சாயத்துகளிலும் புதியதாக சாலை அமைக்கப்பட்டதாக நிறைய ரசீதுகள் வரும்.
அதை ரசீதுப்படி டிக் செய்யும் வேலையை மட்டுமே தமிழ்நாடு உள்ளாட்சி தணிக்கைத் துறை செய்ய முடிகிறதே தவிர, உண்மையிலேயே இந்தச் சாலை போடப்பட்டுள்ளதா என்று போய் நேரில் ஆய்வுசெய்ய முடியாது.அதேபோன்று, சத்துணவுத் திட்ட ஆய்வுகளில் கூட வெறுமனே மூட்டைகள் இருக்கிறதா என்கிற ஆய்வோடு முடித்துக்கொள்ளத்தான் அதிகாரம் உள்ளது. வேளாண் விரிவாக்க மையத்துக்கு மத்திய அரசின் மூலம் அளிக்கப்படும் மானியம் கோடி கோடியாய் வருகிறது. அவை உண்மையாகவே பயனாளிக்குக் கிடைத்ததா என்பதை தமிழகத்தின் உள்ளாட்சித் தணிக்கைத் துறை பயனாளிகளை நேரில் போய் பார்த்து, கள ஆய்வு செய்ய அவர்களுக்கு அதிகாரம் இல்லை. தங்களுக்கு அனுப்பப்படும் ஆவணங்களையும், ரசீதுகளையும், சான்றுகளையும் பார்த்துத் தணிக்கை நடத்த வேண்டிய நிலையில் அவர்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. நேரில் ஆய்வு செய்யவும், தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால் தாங்களே அதுகுறித்து வழக்குப் பதிவு செய்யவும் அதிகாரம் வேண்டும் என்று தமிழ்நாடு உள்ளாட்சித் தணிக்கைத் துறை அலவலர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுவரை அவர்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை. ரசீதுகளில் குளறுபடி தெரியவந்து, மொத்த கோப்புகளையும் கொண்டு வந்து வைக்கும்படி சொன்னால், குறிப்பிட்ட அலுவலர் சில மாதங்களுக்கு விடுமுறையில் போய்விடுவார். அந்தக் கோப்புகள் வரவே வராது. ஆய்வு முடியும் வரை அவர் விடுப்பில் இருக்கிறார் என்றே காரணம் சொல்வார்கள்.
கோப்புகளைப் பார்க்க முடியவில்லை என்று தணிக்கையில் பதிவு செய்ய முடியுமே தவிர, அந்தக் கோப்புகளைத் தராமல் ஏமாற்றிய அந்த அலுவலகத்தின் பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று கோர முடியாது. தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்திலும், மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திலும் மிகப்பெரும் மோசடிகள் நடந்துள்ளன என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. தலைமைக் கணக்கு தணிக்கையாளருக்கு இந்த அதிகாரத்தை வழங்கினால், அவர்கள் வந்து ஆய்வு செய்தால், செண்பக அணையில் சிக்கியதுபோல எத்தனை அலுவலர்கள் சிக்குவார்களோ தெரியாது. திட்டம் போட்டுத் திருடும் கூட்டம் திருடிக் கொண்டேதான் இருக்கும் என்பதற்காக அதைச் சட்டம் போட்டுத் தடுக்க வேண்டிய கூட்டம் மௌனமாக வேடிக்கை பார்க்க முடியாது. பல தவறுகளைத் தடுக்க முடியாவிட்டாலும் தவறு செய்தவர்களை அவ்வப்போது இனம் கண்டு தண்டிக்க முடிந்தால் தவறுகள் குறைய அது காரணமாக அமையும்.
நன்றி http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial&artid=436779&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=%3Cfont%20color=%22red%22%3E%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%3C/font%3E%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8B...?
No comments:
Post a Comment